என்னிடம் 'நீ சின்ன வயதில் யாருடைய விசிறி ' என்று கேட்டு நான் சொன்ன பெயரைக் கேட்டு ஒரு நிமிடம்
திடுக்கிட்டு 'என்ன ' என்றாள். உலகத்திலேயே தலை சிறந்த நடிகர் அவர் ' என்று சொன்னதும் 'இல்லை அதைப் பற்றி ஒன்றும் இல்லை.
பட் ஹி இஸ் லைக் யுவர் டாட் ' என்று பதில் சொன்ன போது அவள் கேட்ட கேள்வியின் அர்த்தம் புரிந்தது. அவள் எதிர் பார்த்த 'கனவுக் கதாநாயகர்கள் ' யாரும் அப்போது கிடையாது. கிரிக்கெட் வீரர்களில் கூட நம் ஊர் கிரிக்கெட் வீரர்கள் கிடையாது. பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டாஸ் டாமில் அவ்வப்போது 'மில்ஸ் அண்ட் பூன் ' கதாநாயகர்கள் தென்படுவார்கள். பிஷன் சிங் பேடி, பிரசன்னா, சந்திரசேகர் இவர்களுக்கு நடுவில் கவாஸ்கர், விஸ்வனாத், வெங்சர்கர் கொஞ்சம் இளமையாக இருப்பார்கள். அப்போது கதாநாயகர்களாக நடித்தவர்களின் சராசரி வயது நாற்பது இல்லை ஐம்பதா ? நான் ஒரு லிஸ்ட் தருகிறேன். அதிலிருந்து நீங்களே கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேஷ், முத்துராமன், ஏவி எம் ராஜன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், எஸ் எஸ் ஆர் எக்ஸட்ரா.... யாராவது இளமையான ஆண்கள் சான்ஸ் கேட்டு வந்தால் ரொம்ப சின்னப் பையனாக
இருக்கிறான் என்று நிராகரித்து விடுவார்களோ ? கதாநாயகிகள் கூட இருபது வருடம் நடித்து புகழடைந்தவர்கள் தான்! அவ்வப்போது இளம் சிட்டுகள் புது முக நடிகைகளாகி 'பழம் பெரும் ' நடிகர்களோடு நடிப்பார்கள். நம் ஊரில்தான் ஆண்களுக்கு வயதே ஆகாதே!
பத்து, இருபது வயது வித்தியாசத்தில் ஆண்களுக்கு வயதானால் என்ன என்று கேட்டு கல்யாணமே செய்து வைத்து விடுவார்கள். பணம் வாங்கி நடிப்பதற்கு என்ன ?அந்த இளம் நடிகைகள் மூத்த நடிகர்களோடு கனவு கண்டு டூயட் பாடுவது 'சைல்ட் அப்யூஸ் ' மாதிரித்தான் இருக்கும். இதை விட கடுமையான வார்த்தையைக் கூட உபயோகிக்கலாம். பாவம் சில 'ரசிகர்கள் ' மனம் உடைந்து விடுவார்கள் என்பதால் வேண்டாம். கதாநாயகனின் கண்ணியம் காப்பாற்றும் பொருட்டு கனவு காண்பது அந்த இளம் நடிகை. 'இன்பம் என்பது இருவரின் உரிமை யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமைதானே '! கடைசி இரண்டு வரிகளை உத்தேசித்து இப்படி காட்சியை அமைப்பார்கள்
போலிருக்கிறது.
இதை விடக் கொடுமை மிடில் ஏஜ் மாமிகளெல்லாம் இளமைத் துள்ளலுடன் நடை போடுவது! படத்தில் முன்பாதியில் கோணவகிடு, காதுகளில் ரிங், பாவாடை தாவணி, இன்னும் கொஞ்சம் மாடர்னானால் டைட்ஸ், ஸ்கர்ட் அணிந்து குதித்துக் கொண்டு இண்டர்வெல்லுக்குப் பிறகு கொண்டை மல்லிகைப் பூ சகிதம் தாலியை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு அடக்க ஒடுக்கமாய் குடும்பப் பெண்ணாகி விடுவார்கள். 'அப்பாவை எதித்தா பேசற ? என்னங்க நம்ப பிள்ளை மாறிட்டான் ' என்று உருக்கமாக வசனம்
பேசுவார்கள்.கொடுக்கிற காசுக்கு அந்த இளம் நடிகைகள் வேண்டுமானால் கனவு காண்கின்ற மாதிரி நடிக்கட்டும். எங்களைப் போன்ற பதினாறு வயது 'மயில்களுக்கு ' என்ன கட்டாயம் ? எதோ அப்பா, பெரியப்பா அளவில் மரியாதை தரலாம். இப்போது 'சித்தப்பு ' நடிகர்களாக இருக்கும் சூப்பர் ஸ்டார், உலக நாயகனெல்லாம் அப்போது குட்டி நடிகர்களாக முன்னேறி கொண்டிருந்தார்கள். இந்த பெரிய நடிகர்களுக்கு தம்பி, மகன், சில சமயம் நண்பனாக நடிப்பதற்கு அவ்வப்போது புது முக நடிகர்கள் வருவார்கள். சிவகுமார், ஜெய்கணேஷ், ஸ்ரீகாந்த்,விஜயன், சுதாகர், கஷ்ட காலம்தான்! பொதுவாகவே உண்மை வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் ஒரு பெரீய்ய இடைவெளி இருந்து கொண்டேயிருக்கும். கதாநாயகன், கதாநாயகி அணியும் ஆடை அணிகலனிலிருந்து பேசும் வசனம் வரை உண்மை வாழ்க்கை நிலையை பிரதிபலிக்காது. கிட்டத் தட்ட ஐம்பது அறுபது வயது கதாநாயகன் கோட் சூட் அணிந்து கொண்டு (இதில் ஒருவர் அணிவது தொப்பையை
மறைக்க) பட்டப்படிப்பு முடித்து விட்டு வரும் கட்டிளங்காளையாக தன்னைவிட இளமையான அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் ' என்று பாடுவார். ஒரு ரசிகக் கூட்டமே மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும்.
பணக்கார அம்மாக்கள் வீட்டிலேயே கல்யாணத்திற்கு கிளம்புபவர்கள் போல் பெரிய கொண்டை நிறைய பூ, எக்கச்சக்கச் ஜரிகை போட்ட பட்டுப் புடவை, நெக்லஸ் இத்யாதிகளோடு சர்வலங்காரத்தோடு தான் காணப்படுவார்கள். ஒருவேளை பணக்கார ஆன்ட்டிகளின் யூனிஃபார்ம் அதுதானா ? பங்களாவுக்குள் நுழைந்து யார் பார்த்தார்கள் ? நடிகர்களின் ஆதிக்கத்தையும் மீறி கேஎஸ்ஜி, ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா என்று டைரக்டர்களுக்காக என்று நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருந்தன. கேவிஎம் மாமா, மெல்லிசை மன்னர் டியிலிருந்து மீண்டு இளையராஜா இசை என்ற புதுமை. அது வரை பின்னணி இசையென்றால் குதிரைக் குளம்பபொலி, சோக வயலின் ஷுயூம் டிஷுயூம் சத்தம்தான் கேட்கும். பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை உணரச் செய்ததே இளையராஜாதான்! சினிமாவை டெக்னிகலாக அணுகுகின்ற அறிவுஜீவித்தனம் மெல்ல வெளிப்பட ஆரம்பித்த காலம்.
என்ன புதுமைகள் வந்தால் என்ன ? தமிழில் 'கலைபடங்கள் ' என்ற அமைப்புக்கே இடமில்லை. ஹிந்தியில், நம்ப பக்கத்து மாநிலமான
கேரளா, கர்நாடகம், ஆந்திராவிலிருந்து கூட 'கலைப்படங்கள் ' வரும். தமிழ் ரசிகர்கள் 'கலையம்சத்தோடு ' கூடிய கமர்ஷியல் படங்களை
ஒத்துக் கொள்வார்களே தவிர இதையெல்லாம் சீந்த மாட்டர்கள். நாயகன் படத்திலே கூட 'நிலா அது வானத்து மேலே ' என்று குயிலி ஆட்டம் வேண்டும். ஸ்ரீதர், பாலச்சந்தர் கொஞ்சம் யோசித்து வித்தியாசமானப் படங்கள் தந்தாலும் தமிழ் பண்பாடு, தாலி சென்ட்டிமென்டை விட மாட்டார்கள். நெஞ்சத்தைத் தொட்ட பிரமாதமானப் படம்தான்! நல்ல ஆரோக்கியத்தோடு சமுதாயத்திற்கு செம தொண்டு செய்யும் டாக்டர். பழைய காதலி புற்று நோய் முற்றிய நிலையில் இருக்கும் கணவனுடன் டாக்டரிடம் சிகிச்சைக்காக வருகிறாள்.
கணவனே பெருந்தன்மையுடன் நான் இறந்தாலும் நீ நல்ல விதமாக வாழ வேண்டும் என்றாலும் ' தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா ? தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா ' என்று உருக்கமாகப் பாடி டாக்டரையும் உணர்ச்சிகரமாகப் பேசி மிரட்டி, கடைசியில் சாகப் பிழைக்க இருந்த கணவன் உயிர் தப்ப நல்ல திடமாக இருந்த டாக்டர் இறந்து விடுவார்.என்ன அநியாயமான முடிவு ? இன்றும் ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்த நல்ல படம்தான். பாலச்சந்தராவது பெண்கள், தாலி என்ற சென்டிமென்டை மாற்றுவாரா என்று பார்த்தால் தன்னைக் கெடுத்தவனையே திருமணம் செய்து கொள்ளும் 'புதுமைப்பெண் '
கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டு தாலி கட்டினாலும் பைத்தியம் பிடித்து அலையும் கதாநாயகி,
(சிவகுமார் உங்களுக்கு நல்லபடியாக வாழ வழியே இல்லையா ?) சாடிஸ்ட் கணவனை வெறுத்து தாலியை கழட்டி கோவில் உண்டியலில்
போட்டதும் கணவனுக்கு கண்ணில் அடிபட்டு விடும். சிந்துபாத் கழுத்தில் தொங்கும் சின்ன லைலா மாதிரி கணவன் உயிர் மனைவியின் தாலியில் தொங்கிக் கொண்டிருக்கிறதா என்ன ? இந்த ஊர் சீனப் பையன்களுக்குக் கூட தாலியின் தாத்பர்யம், வித விதமான தாலி வகைகள் முதற் கொண்டு ஐய்யர் தாலி, ஐய்யங்கார் தாலி, செட்டியார் தாலி, முஸ்லிம், கிறிஸ்துவர்கள், மற்றும் 'சீர் திருத்த ' தாலி கூடத் தெரியும்.இவ்வளவையும் தெரிந்து கொண்டு 'வேர் இஸ் யுவர் வெட்டிங் ரிங் ? ' என்று வேறு இன்னும் விசாரிப்பார்கள். ஆனா நம்ப ஊர் 'சின்னத் தம்பிக்கு ' மட்டும் தாலி என்றால் என்னவென்றே தெரியாமல் தாலி கட்டி திருமணம் செய்து கொள்வார். நாமும் அதை சூப்பர் ஹிட்டாக்கி விடுவோம். தாலியே கட்டாமல் குழந்தையைக் கொடுத்து விட்டு ஓடிப்போன காதலன் இறந்தவுடன் பொட்டழித்து விதவைக்கோலம் பூணும் எம்ஆர்பி உங்களுக்காகக் காத்திருக்கும் அழகான இளமையான எலிஜிபில் பேச்சுலர் ஆசையில் மண் அள்ளிப் போட எப்படி மனசு வந்தது ? பெண்கள் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்கும் கணவனுக்கு தாலி கட்டி விடும் பொஸசிவ் மனைவி என்று குறும்புகள்! குடும்பப் பட டைரக்டர் கேஎஸ்ஜி கேட்கவே வேண்டாம். இரண்டு நல்லவர்கள் மோதிக் கொண்டு ஒரு பெண்ணின் ழ்க்கையைப் பந்தாடுவார்கள். திருமண வாழ்க்கையில் பிரச்னை என்று கணவனே மனைவிக்கு வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் புதுமை என்று பார்த்தால் மனைவி கணவன் காலில் விழுந்து உயிரை விட்டு விடுவாள். 'ஆயிரத்தில் ஒருத்தியாக ' இருக்கும் குழந்தை உள்ளம் கொண்ட கதாநாயகியைப் புரிந்து கொண்டு கதாநாயகன் வாழ்க்கைதர முன் வந்தாலும் கெட்ட பெயர் வந்து விட்டதே என்று உயிரை விடும் கதாநாயகி! எத்தனை பாரதி, பாரதிதாசன், பெரியார் வந்தால் என்ன ? பெண்களை இப்படி சென்ட்மென்டால் மூளைச் சலவை செய்வதில் தமிழ் சினிமாவின் பங்கு என்று பெரிய ஆய்வு நடத்தி படம் பெறலாம். இப்போது பரவாயில்லை!
தலைகாணிக்கடியில் கழற்றி வைத்த தாலியை தேடி 'அலைபாயும் ' கதாநாயகி! தாலியை கண்ணாடியில் தொங்க விட்டு விட்டு மனைவியை
சீண்டி சிரிக்கும் கணவன்! தமிழ் சினிமா முன்னேறி விட்டது.
சினிமா பார்ப்பதிலும் சினிமாவைப் பற்றி பேசுவதிலும் ஏகப்பட்ட தடைகள், கெடுபிடிகள் இருந்தன. சினிமாவே பார்க்கமாட்டோம் என்று அலட்டிக் கொள்ளும் சமத்துப் பெண்கள், நல்ல படங்கள் மட்டும் செலக்ட் பண்ணிப் பார்க்கும் 'அறிவு ஜீவிகள் ', சான்ஸ் கிடைத்தால் எந்த திரைப்படத்தை வேண்டுமானாலும் பார்க்கும் சந்தர்ப்பவாதிகள், அம்மா அப்பாவோடு தேவரின் தெய்வம், துணைவன் போன்ற படங்கள் பார்க்கும் 'பக்திமான்கள் '. இப்படி நிறைய வகையினர் இருந்தாலும் சினிமா என்ற மாய வார்த்தை எல்லோரையும் மயக்கிக் கொண்டுதான் இருந்தது. சினிமாவே பார்க்காத பெண்கள் கூட கதை கேட்கிறேன் என்று ஒரே சினிமா கதையை மூன்று பேரிடம் கேட்டு திருப்தி அடைவார்கள். தமிழ் சினிமா என்ன பெயரில் வந்தால் என்ன ? எல்லாம் கிட்டத்தட்ட ஒரே ஃபார்முலாதான்! சமூகப் படம் என்றால் திருமணம் முடிந்து முதலிரவு அறையில் நுழைந்ததும் கிருஷ்ணராஜா சாகரில் டூயட் பாடுவார்கள். பக்தி படம் என்றால் முதலிரவில் 'நம் திருமணம் முடிந்ததும் பழனிக்கு நடந்தே வந்து உங்களுக்கு மொட்டையடித்து நம் முதல் குழைந்தைக்கு முருகன் திருநாமம் வைத்து வணங்க வேண்டும் அத்தான் ' என்று பக்தி பரவசத்தோடு டூயட் பாடுவார்கள். கற்பழிப்பு காட்சி என்றால் காப்பாற்றுவதற்கு எங்கிருந்தோ
அருவியில் குதித்து கயிற்றில் தொங்கி கடைசி நிமிஷத்தில் கதாநாயகியின் கற்பை கதாநாயகன் காப்பாற்றி விடுவான். பக்தி படமென்றால்
முருகா முருகா என்ற அலறல் சத்தம் கேட்டு மயில் பறந்து வந்து வில்லனை குத்திக் குதறும். வழக்கம் போல் கவர்ச்சி நடனம்!
கிளப்பில் கேபரே நடனம். இல்லை தேவலோகத்தில் ரம்பை, ஊர்வசி நடனம், நாட்டுப்புற கலைகளான குறத்தி நடனம், மயிலாட்டம், கரகாட்டம் என்று கவர்ச்சி வழிய ஆட்டம்! பெண் குழந்தைகளை கன்னாபின்னா படங்கள் பார்த்து மனசு கெட்டுப் போய்விடாமல்
பாதுகாத்து பக்தி படங்கள் மட்டும் பார்க்க அனுமதிக்கும் அப்பா அம்மாக்களுக்கு இந்த சூட்சுமம் புரிந்ததில்லை. பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அந்த வயதில் தெரிய வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொண்டுதான் வளர்கிறார்கள் என்பது புரியாமலா இருக்கும் ?
அப்பா அம்மாவுக்கு பதினாறு வயது வரவில்லையா ?
எத்தனை அபத்தங்களோடும் முரண்பாடுகளோடும் திரைப்படம் வந்தாலும் மூன்று மணி நேர மாய பிம்பம் பிரமிப்பைத்
தந்தது. சந்தோஷத்தைத் தந்தது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். உண்மை வாழ்க்கை இதை விட அபத்தங்களும்
முரண்பாடுகளையும் கொண்டதுதானே ?
கனவுக் கதாநாயகன் யார் என்று சொல்லவே இல்லையா ? போனால் போகிறது என்று ஒரே ஒருவருக்கு பாஸ்மார்க் கொடுத்திருந்தோம். மீண்டும் நன்றாகப் படித்துப் பாருங்கள்! கண்டு பிடித்து விடலாம்!
netvasi@gmail.com
No comments:
Post a Comment