Search This Blog

Sunday, August 3, 2008

நான் இனி மெல்லச் சாவேன் !!

1980
ஆனாலும் பழம் பாடல்கள், செய்யுள்கள் மற்றும் இலக்கணங்களால் தமிழ் வகுப்பு போரடிக்க ஆரம்பித்தது. நேர் மா, புளி மா, அடை மா எல்லாம் வந்து என் சின்னப் புத்திக்கு எட்டாமல் போகவே இலக்கணத்தில் சூன்யம்.
சில பாடல்கள் சுவரசியமாக இருக்கும். “தத்தா ! நமர்!” இடம் சுட்டிப் பொருள் கூறு என்பதற்கு நல்ல இட்டு கட்டி பாஸ் மார்க் வாங்கி விடுவேன். தமிழில் மார்க் கம்மியானால் கண்டுக்க மாட்டார்கள். “போட மாட்டாங்கப்பா ! “ என்பார்கள் பெரியோர். “இட்டார் பெரியோர் ! இடாதார் இழிகுலத்தோர்” என்ற பாடல் மட்டும் மனதில் அரித்து தமிழ் வாத்தியார்களை வெறுக்க வைத்தது. மதிப்பெண் வாங்காதது இலக்கணம் சரியாகப் அறியாததால். இப்போதும் அடியேன் அறிகிலேன் !
ஆங்கிலத்தில் அப்போது “ஜெரண்ட்”, “ரென் அண்ட் மார்ட்டின்” இலக்கணப் புத்தகத்தையெல்லாம் கரைத்துக் குடித்தேன் !
தமிழ் உரைநடைப் பகுதி சில நன்றாக இருக்கும். பெரியாரைப் பற்றி இருக்கும். அண்ணாவைப் பற்றி இருக்கும். பல சுவாரசியமில்லாததாக இருக்கும். காந்தியை பற்றி இருக்கும். சத்திய சோதனை படித்ததாக ஞாபகம். அடுத்த நாளே பொய் சொன்னதாகவும் ஞாபகம் !
வீட்டில் தமிழ்வாணனின் கல்கண்டு வரும். அதில் தமிழ்வாணனின் சங்கர்லால் தமிழைப் புதுமையாகப் பேசுவார். ஜேம்ஸ் பாண்ட் போன்று வரும் அவருக்கும், அவரின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் மிக நாகரிகமாகவே இருக்கும். நான் “மாடர்னா” க உணர்ந்தேன். அதற்கும் ஆங்கிலத்திற்கும் சம்பந்தமில்லை என்று கண்டுபிடித்தேன். டா (தேநீர்!) நிறையக் குடிக்க ஆரம்பித்தேன், சங்கர்லாலைப் போன்று! ஒரு மாது (என் அம்மா தான்!) தான் கொடுப்பாள் (ன் ?).
(தமிழ்வாணன் கதைகளில் மாது என்பது சங்கர்லாலின் வேலைக்காரன் !)
1984
பிறகு தேவனின் எழுத்துக்கள், கல்கியின் எழுத்துக்கள் ஆர்வத்தினைத் தூண்ட, அப்பா மூலம் சாண்டில்யனின் வேக, விவேகமான சினிமா போன்ற மயக்க எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்தேன். வரலாறை வேறு விதமாகக் காண்பித்த தன்மை எனக்குப் பிடித்திருந்தது. சாண்டில்யனின் மோகக் காட்சிகளும், லதாவின் ஓவியங்களும் என்னைக் கவர ஆரம்பித்தன (வேறு காரணங்களுக்காக). பெண்களின் உடல் சம்பந்தப்பட்ட தமிழறிவு கொழுந்து விட்டெறிய ஆரம்பித்தது !
இளவரசிகளுடன் பல்வேறு கற்பனைக் காட்சிகள்!
1986
போதும் இதெல்லாம் படித்தது என்று வீட்டில் தடா “தடா”லென்று விழுந்தது. உருப்பட வழி பாரு” அம்மா சொன்னாள்.
கணிதம், பூகோள, அறிவியல் அனைத்தும் ஆங்கிலத்தைச் சுற்றவே ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, இனார்கானிக், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்று பல்வேறு அமிலங்களை மனதும், அறிவும் செறிக்க ஆரம்பித்தது.
பொழுது போக்குத் தமிழ் ரேடியோ மூலமாகப் பாடல்கள் மூலம் மட்டும் அவ்வப்போது காதில் எட்டும். சென்னைத் தொலைக்காட்சியில் “உழைப்பவர் உலகம்”, “வயலும் வாழ்வும்” பார்த்துத் தமிழை மறக்க முயற்சி செய்தேன். முடியவில்லை ! விடாமல் துரத்தியது. ரஜினிகாந்தும் தமிழைக் கெடுக்க “நெரய” முயற்சி செய்தார். முடியலை! ஜாக்கி சான் வந்து தமிழ் பேசியதால், எனக்கு தமிழறிவு மேலும் அதிகரித்தது.
தமிழ் பக்கம் அறவே போகவில்லை. போக பைத்தியமா என்ன ?. புள்ளியியல் தமிழில் படிக்க மறுத்தேன். 6 எழுத்துக்களை எழுதவே கடினமாக இருந்தது. Statistics என்று சுலபமாக 10 எழுத்துக்களைவைத்து எழுதி படித்தேன்.
“ ?ிந்தி கத்துக்கடா !” பம்பாயில வேலை கிடைத்தால் என்ன பண்ணுவே ? என்று அம்மா தள்ள, அழகிய பெண்களைச் சந்தித்து பேசுவதற்காக ?ிந்தி வகுப்பு செல்ல ஆரம்பித்தேன்.
தமிழறிஞர் ஒருவர் ?ிந்தியைத் தமிழைப் போன்று உச்சரித்து சொல்லித் தொலைத்தார்.
இரு வழியாகத் “தந்தி ( தமிழ் + ?ிந்தி!) மொழி” படித்தேன்.
1990
இந்தப் பெண்கள் வேறு தமிழ் பேசினால் முகத்தைத் திருப்புவதில்லை. ஆங்கிலத்தில் கலாய்த்தால், திரும்பிப் பார்க்க ஒரு காரணமாக இருக்கும். பீட்டர் தான் நமக்கு சொந்தம்.
திருவள்ளுவரை வயசான பிறகு பார்க்கலாம் என்று தமிழை மூட்டைக் கட்டி பரண் மேல் நாடி ஜோதிட ஓலைச் சுவடியாகப் போட்டு விட முடிவெடுத்தேன். நிறைய “பீட்டர்” (ஆங்கிலம் பேசுவது தான் சென்னைத் தமிழ் மொழியில்!) விட காதல், கலவி, குழந்தைகள் வந்த பிறகு . . .


“ம்ம்ம்ம் அப்பா சொல்லு !”
“டாடி”
“அம்மா சொல்லு”
“மம்மி”
“உன் பேர் சொல்லு ?”
குழந்தை பேந்தவாக முழிக்க, “பாரு உன் குழந்தைக்குத் தமிழ் வர மாட்டேங்குது !”
“வாட் இஸ் யுர் நேம் ?”
பளிச்சென்று வந்தது பதில்.

“டான் பிரவுன் ஒரு நல்ல எழுத்தாளர் தான்! டாவின்சி கோட் படித்திருக்கிறாயா ?”
“இல்லை. நான் படித்ததில்லை “.
“நிறையப் படிக்கணும். அப்பதான் மற்றவங்க என்ன சொல்றாங்க என்று தெரிய வரும்”
“சினிமா நடிகைகள் ஏர்போர்ட்டில் அது தான் கையில் வைத்திருப்பார்கள். ஏன் நம்ம வெளிநாட்டுக்குப் போகும் நம் தங்கங்களும் அது தான் படிக்கும். ஏர்போர்ட்டில் கையில் பொன்னியின் செல்வன் வைத்திருந்தால் ஒரு மாதிரி இருக்கும்.”
“கல்கியின் பொன்னியின் செல்வன் படித்திருக்கிறாயா ?”
“இல்லை”
“ஸிட்னி ஷெல்டான் ? “
“ஓ யெஸ் !”
“ஜெயகாந்தன் ?”
“யாரு ?”
“ஜான் கிரிஷாம் ?”
“ஓ ! பிரமாதமாய் வக்கீல்களை வைத்து கதை எழுதுவாரே ?”
“தேவனின் ஜஸ்டிஸ் ஜெகன்னாதன் படிச்சிருக்கியா ?”
“கேள்வியே பட்டதில்லை !”
“நிறையப் படிக்கணும். அப்பதான் மற்றவங்க என்ன சொல்றாங்க என்று தெரிய வரும். யார் எழுதியது என்று பார்க்காமல் எல்லாவற்றையும் படிக்கணும். அப்ப தான் யார் என்ன எப்படி சொல்ல வர்றாங்க என்று சொல்லணும். இல்லையென்றால் ஒரு சாரார் எழுதுவது மட்டும் எஞ்சி நின்று அது மட்டும் தான் உண்மை என்று மடத்தனமான அறிவு வளரும்”.
“அவங்க யாரென்று தெரியாதே ?”
“படிக்க முயற்சி பண்ணாமல் ஒருவருடன் பேசாமல், அவர் எழுதியது படிக்காமல் எப்படி அவர்களைப் பற்றித் தெரியும் ?”
“டைம் இல்லை !”
“டைம் இல்லை என்று சொல்லாதே ! ?ாரி பாட்டர் கியூவில் நின்று வாங்க வில்லை ? என்னிக்காவது தேடி வாண்டு மாமா எழுதியது போய் வாங்கிப் படித்திருக்கிறாயா ?”
“நம்மவங்க அதிகம் எழுதறதைப் பார்க்கலை !”
“புத்தகக் கண்காட்சி ஆர்ட்ஸ் காலேஜில் வந்த போது போகாமல் நீ பீர் குடிக்க பார் தானே சென்றாய் ?”
“சும்மா, ஜாலிக்குப் போனேன் ! “
“புத்தகம் படிப்பதும் சும்மா ஜாலிதான் ! படிச்சு பாரு !”
“படிச்சிருக்கேன் ! “மஜாவான” புத்தகம் படிப்பேன் !”
“அதில நீ கிராதகன் தான் ! நம்மவங்க சொல்றதை மஜா விஷயத்தையும் சேர்த்து, மற்றவங்க படிக்க வேண்டாமா ? நீ சொன்னதை, கல்கி சொன்னதை, புதுமைப்பித்தன் சொன்னது, ஜெயகாந்தன் சொன்னது, திஜா சொன்னது என்னவென்று மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம் ?. அதுக்கு நாமெல்லாம் ஆங்கிலத்தில் எழுதணும்.”
“காம சூத்ராவிற்குப் பின்பு (அதுவே சமஸ்கிருதம் மூலம்!) ஒரு நல்ல புத்தகம் தமிழில் வரவேயில்லை. நான் எழுதட்டுமா ?”
“சரி ! எழுது! தமிழ் தெரியுமா ?”
“அந்த மாதிரி விஷயத்தில் எனக்கு நிறைய பரிச்சயம்”
“அப்ப கவலை விடு. செளகரியம்!”
“ரெளவுலிங் ?ாரி பாட்டரில் பிளந்து கட்டுறாராமே ?. வா கியூவில் நின்று வாங்கலாம். வீட்டுக்கு வந்தா ஒரு “காப்பி” யோடு வான்னு மகன் சொல்லிட்டான்”
“ஏன் கோகுலம் வாங்கித் தரமாட்டாயா ?”
“உன்னைக் கேட்டேன் பார் !”
வீட்டிற்குப் போய் குழந்தையிடம், “என்ன படிக்கிறாய் ?”
பேந்தாவாக முழித்தது குழந்தை.
“விச் ?ாரி பாட்டர் புக் ஆர் யூ ஸ்டடியிங் ?”
“புக் நம்பர்! 5 ! இட் இஸ் மார்வெலஸ்”.
“வீட்ல அம்மா என்ன சமைத்தாள் ?”
“பொட்டேடோ கறி !”
“உருளையா ?”
“ம்ம்ம் ?”
பேந்தாவாக முழித்தது குழந்தை.
இவன் தமிழ் பேசுவானா ? என்று மனைவியிடம் கேக்க “பேசுவானாத் தெரியலையே ? என்ன பண்ணலாம்” என்று அபத்தமாகப் பதில் வந்தது.
2020
குழந்தை பெரியவனாது.
அவளைப் பார்த்தது.
“ஆர் யூ டமிலியன் ?”. “டு யூ நோ டமில் ?” “நோ ! மை பேரண்ட்ஸ் அண்ட் கிராண்ட்மா யூஸ்ட் டு ஸ்பீக்!”
“கேன் யூ ஸ்பீக் டமில் ! ?”
“நோ !”
“ஒய் ?”
“பிகாஸ், ஐ டோன்ட் வாண்ட் டு ( எனக்குப் பிடிக்கலை !)”
சரி ! இரண்டும் ஒன்று தான் ! ரெண்டுங் கெட்டானகளாக இருக்கிறார்கள் ! திருமணம் பண்ணி வைப்போம் ! பண்ணி வைத்தேன் !
மீண்டும் கலவி, குழந்தைகள் . . . .பெருக்கம் முதலியன ஸ.
2040
“விச் புக் ஆர் யூ ஸ்டடியிங் ?”
“It is about “Death of Languages”. It is interesting to read “How several of them had to die!”.
“இங்கு நான் சாவக் கிடைக்கிறேன். இவங்க மொழியப் பற்றி பேசுகிறார்களே ?” என்று “லொக்! லொக்’ கென்று இருமினேன் .
“My dad is not feeling well. I have to give him something to read in his last days ! I can not read to him since I do not know how to read his South Asian lanaguage”.
“Dad, what do you want to read ?”.
“திருக்குறள்”.
“Mom ! What is Kural ?”
“கூகில் வெப்பில் செர்ச் பன்ணு ! (தேடு) ! வில் பி தேர் (அங்கு இருக்கும்) !”
கடைசி காலத்திற்கு நமக்கு வேண்டியது தான் என்று படிக்க முடிவெடுத்தேன் !

மெல்லச் சாவதென்று !!
----

No comments: